search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குணசீலம் பெருமாள் கோவில்"

    குணசீலம் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள குணசீலம் பிசன்ன வேங்கடாசலபதி பெருமாள் கோவிலில் பிரமோற்சவ திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு உற்சவ பெருமாள் தினமும் அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், கஜ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு பூ அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 5 மணிக்கு புண்யாகவாசனம், திருவாராதனம் நடைபெற்றது. தொடர்ந்து பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பாடு கண்டு தேரில் எழுந்தருளினார். இதனையடுத்து 8.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோவிந்தா... கோவிந்தா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கோவிலின் தேரோடும் வீதியில் ஒரு சுற்று சுற்றி வந்து காலை 9.16 மணிக்கு நிலையை அடைந்தது.

    தேரில் எழுந்தருளியுள்ள பெருமாள் ஸ்ரீதேவியுடன், பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் உள்ளார்.

    தேர் வீதியை சுற்றி சென்றபோது, நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் தேரினை பின்தொடர்ந்து அங்கபிரதட்சணம் செய்தனர். தேரில் பெருமாள் திருவீதி உலா வரும்போது அவரை தரிசனம் செய்து அங்கபிரதட்சணம் செய்வதன் மூலம், நம் வாழ்வில் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் பெற்று வாழலாம் என்பது ஆகமகூற்று ஆகும். இதனையடுத்து மூலவர் பெருமாளுக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் துடையூர், கிளியநல்லூர், சிறுகாம்பூர், ஆமூர், கோட்டூர், சேந்தமாங்குடி, சென்னக்கரை, குணசீலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்து கலந்துகொண்டு பெருமாளை தரிசனம் செய்து வழிபட்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் நற்பணி மன்றங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவையொட்டி வாத்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அரங்கநாதன், ராஜேந்திரன், சுப்பிரமணியன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது. மாலை 5.30 மணிக்கு பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். தொடர்ந்து ஏகாந்த மண்டபத்தில் கும்ப தீபாராதனை நடைபெற்றது. 
    ×